“தவறான தயாரிப்பை இறக்குமதி செய்து பணத்தையும் காலத்தையும் வீணாக்கிய மோடி அரசு”

Must read

திருவனந்தபுரம்: சீனாவிலிருந்து தரமற்ற கொரோனா பரிசோதனை உபகரணத்தை வாங்கியதன் மூலம், பணம் மற்றும் காலத்தை நரேந்திர மோடி அரசாங்கம் வீணாக்கி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர்.

மேலும், மோடி அரசின் ஆதரவு பெற்ற இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் என்ற அமைப்பையும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரேபிட் ஆன்டிபாடி கிட்’ எனப்படும் விரைவு கொரோனா பரிசோதனை உபகரணத்தை வாங்கியது மோடி அரசு. ஆனால், இந்தக் கருவி மிகவும் தரமற்றது மற்றும் இது 5% மட்டுமே உண்மையான முடிவுகளைக் காட்டுகிறது என்பது தெரியவந்தபோது, பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.

ஆனால், இந்திய தொழில்நுட்பத்தை நம்பாமல், சீன தயாரிப்பை அவசரப்பட்டு வாங்கி, மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி, தனது திறமையின்மையை மீண்டும் நிரூபித்துவிட்டது மோடியின் அரசாங்கம். இதைத்தான் சாடியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர்.

“முந்தைய அரசு தவறு செய்திருந்தால், அதிலிருந்து பாடம் கற்று, அதை மீண்டும் செய்யாமல் இருப்பதே ஒரு நல்ல அரசிற்கான இலக்கணம். ஆனால், உள்ளதைச் சொல்லும் என்னைப் போன்ற எதிர்க்கட்சியினரை, ஆட்சியின் ஆதரவாளர்கள் வழக்கம்போல் சாடி வருகின்றனர். வழக்கம்போல, காங்கிரஸ் ஆட்சி காலத்தை அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்” என்றுள்ளார் சசி தரூர்.

More articles

Latest article