பெங்களூரு:

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து பயமுறுத்தி வருகிறது என்று மதசார்பற்ற ஜனதாதள தலைவர் எச்.டி.குமாரசாமி கூறி உள்ளார்.

பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜவை பதவியில் அமர வைத்துள்ள கவர்னரை கண்டித்தும், முதல்வராக பதவி ஏற்றுள்ள எடியூரப்பா பதவி விலக கோரியும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர்கள், எம்எல்ஏக்கள் கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா முதல்வராக பதவி யேற்றுள்ளார். இது அரசியல் சாசனத்த மீறிய செயல்.  அரசியல் சாசனத்தை மீறி கவர்னர் செயல்பட்டு வருகிறார்.

மத்திய அரசு  காங்., மஜத எம்எல்ஏக்களுக்கு நெருக்கடி கொடுத்து  வருகிறது.மத்திய பா.ஜ., அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. ஜனநாயகத்தை பா.ஜ., கேலிக்கூத்தாக்கியுள்ளது.

மத்திய அரசு வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தி எம்எல்ஏக்களை மிரட்டுவது  வாடிக்கையாகி வருகிறது. மோடி அரசு நெருக்கடி கொடுப்பதாக ஆனந்த் சிங் என்ற காங்கிரஸ் எம்எல்ஏ கூறியதாக மற்றொருவர் ஏன்னிடம் கூறினார். எங்கள் கட்சி எம்எல்ஏக்களை நாங்கள்  பாதுகாப்போம் என்ற குமாரசாமி, . பா.ஜ., எவ்வாறு ஜனநாயக அமைப்புகளை சீரழக்கிறது என்பது குறித்து, அனைத்து கட்சிகளிடமும் பேச வேண்டும் என எனது தந்தை தேவகவுடாவை கேட்டு கொள்வேன் என்றும், மத்திய அரசின் மிரட்டலை காங்கிரசுடன் இணைந்து எதிர்கொள்வோம் என்றும் கூறினார்.

மேலும், கர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் அரசியலை எதிர்கொள்ள அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும், தர்ணா போராட்டத்தை தொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு பேரணியாக செல்வோம் என்றும் கூறி உள்ளார்.