பாரிஸ்:

ஃபிரான்ஸ் நாட்டில் 36 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய மேற்கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் தலையீட்டுள்ளார் என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் நாளை இந்தியா வருகிறார். முன்னதாக அவர் இந்தியா டுடே செய்திப் பிரிவு இயக்குனர் ராஜ் செங்கப்பாவுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அப்போது, ‘‘ரஃபேல் ஒப்பந்த பாதுகாப்பு அம்சங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிக்கலான சில விஷயங்களையும் தேவைப்பட்டால் இந்திய பிரதமர் மோடி வெளியிடலாம். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ பொருளாதாரம், தொழில்துறை மற்றும் போர் திறன் சார்ந்த நலன்களின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளின் நலன் கருதி இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு ஒப்பந்தத்தில் தொழில் சார்ந்த முக்கிய விஷயங்கள் இருந்தால் அது குறித்த விபரங்களை வெளியிடுவது ஏற்கதகுந்தது கிடையாது. வணிக ரீதியிலான ஒப்பந்தம் எதிர் நிறுவனத்தினர் அறிந்து கொள்ள ஏதுவாக அமைந்துவிடும். நிறுவனம் சார்ந்த நலன் காரணமாக ரகசியம் காக்கப்படுவது தான் நியாயம்.’’ என்றார் மெக்ரான்.

இதன் மூலம் வணிகம் மற்றும் தொழில்நுட்ப சார்ந்த தகவல்கள் தான் ரகசியம் என்று மெக்ரான் குறிப்பிட்டுள்ளார். எனினும் தேவைப்பட்டால் ஒப்பந்த பாதுகாப்பு அம்சங்களில் உள்ள சில தகவல்களை மோடி அரசு வெளியிட்டுக் கொள்ளலாம்.

எதிர்கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்க்க ஏதுவாக இதற்கு ஃபிரான்ஸ் எதிர்ப்பு தெரிவிக்காது என்று மெக்ரான் தெரிவித்துள்ளார். இதனால் ரஃபேல் விமான கொள்முதல் முறைகேடு குறித்து விளக்க அளிக்க வேண்டிய பொறுப்பு மோடி வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.