கேப்டவுன்:

இந்தியாவை போல் தென் ஆப்ரிக்காவிலும் குப்தா குழுமம் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திவால் அறிவிப்புக்கு விண்ணப்பித்துள்ளது. இவர்களிடம் பேங்க் ஆஃப் பரோடா மட்டும் கடன் கொடுத்து ஏமாற்றமடைந்ததாக கூறப்பட்டது. தற்போது பேங்க் ஆப் இந்தியாவும் ரூ.21.11 கோடி கடன் கொடுத்திருப்பது உறுதியாகியுள்ளது.

.

குப்தா குழுமத்தின் 2 நிறுவனங்களுக்கு கடன் கொடுத்திருப்பதை பேங்க் ஆப் இந்தியா சிஇஓ தினபந்து மொகபாத்ரா ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘இந்த கடன் மதிப்பை ஈடு செய்யும் வகையில் இதற்கு இணை 100 சதவீதம் உள்ளது. முதலில் அந்நாட்டு மதிப்பில் 7 மில்லியன் ராண்ட் கடன் வழங்கப்பட்டது. பின்னர் தீவு திட்ட முதலீட்டிற்கு 31.5 மில்லியன் ராண்டாக கடன் உயர்த்தப்பட்டது’’ என்றார்.

இந்திய பாரம்பரியத்தை கொண்ட குப்தா குழும நிர்வாகத்தினர் தென் ஆப்ரிக்காவில் குடியேறிவிட்டனர். இதேபோல் பாங்க் ஆஃப் பரோடா 60 மில்லியன் ராண்ட் கடன் வழங்கியுள்ளது. இதனால் அந்த வங்கி தென் ஆப்ரிக்காவில் மூடும் நிலைக்கு வந்துள்ளது. குப்தா குழுமம் கடனை திருப்பி செலுத்த தவறினால் அந்த வங்கியின் நஷ்டம் ரூ.120 கோடியாக இருக்கும்.

பேங்க் ஆஃப் இந்தியாவின் கடனுக்கு ஈடான சொத்துக்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்ய காலதாமதம் ஆகும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். குப்தா சகோதரர்களும் தென் ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறிவிட்டனர். இவர்கள் மீது பல கோடி டாலர் மதிப்புள்ள நாட்டின் வளத்தை சட்டவிரோதமாக கப்பல் மூலம் கடத்திச் சென்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.