டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி கேள்வி நேரம், தனிநபர் மசோதா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது, மத்தியஅரசு பணிந்து வந்துள்ளது.  கேள்வி நேரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவித்து உள்ளது.

 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், வரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது. கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரையில் நடத்தப்படுகிறது.  காலையில் மாநிலங் களவை கூட்டமும், பிற்பகல் மக்களவை கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில்,  தனிநபர் மசோதா, கேள்வி நேரம் கிடையாது என அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப் பட்டிருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கபட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, காங்கிரஸ், திமுக உள்பட  பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்தியஅரசின் இந்த நடவடிக்கை  ஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் செயல் என்றும், அடிப்படை அரசியலுக்கு எதிரானது என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேள்வி நேரத்தை நடத்த மாநிலங்களவை தலைவரும், மக்களை சபாநாயகரும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எழுத்து மூலமாக கேட்கப்படும் 160 கேள்விகளுக்கு தினமும் பதில் அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.