சென்னை: எதிர்க்கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறையைக்கொண்டு ரெய்டு நடத்துவது, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளைக் களங்கப்படுத்துகிற முயற்சியாகவே கருதப்படுகிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பபதாவது,
“கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியே ஒரு ஊழல் ஆட்சி என்பதற்கு நிறைய ஆதாரங்களைக் கூற முடியும். அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து முதல்வராக இருந்த ஜெயலலிதா பதவியில் இருக்கும்போதே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர். இந்தியாவிலேயே ஒரு முதல்வர் பதவியில் இருக்கும்போதே, ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, சிறைக்குச் சென்ற ஜெயலலிதாவைத் தவிர வேறு எந்த முதல்வரும் இருக்க முடியாது. அத்தகைய ஊழல் பாரம்பரியத்தில் வந்தவர்தான், இன்றைக்கு ஜெயலலிதாவின் ஆட்சி நடத்துகிற முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
பாஜக, அதிமுகவுக்கு ஆதாயம் ஏற்படுத்துவதாகக் கருதி, கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் வருமான வரித்துறை, திமுக, காங்கிரஸ் கூட்டணியில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது என்கிற விவரம் வருமான வரித்துறையால் வெளியிடப்படவில்லை.
இவை அனைத்துமே தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளைக் களங்கப்படுத்துகிற முயற்சியாகவே கருதப்படுகிறது. இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராக இருக்கிறது. வெற்றியை நோக்கி பீடுநடை போட்டு வருகிற திமுக- காங்கிரஸ் கூட்டணி, பாஜகவின் அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சப்போவதில்லை.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக ‘எஸ்.ஆர்.எஸ். மைனிங்’ நிறுவனத்திடமிருந்து, அன்றைய அமைச்சர்கள் வைத்தியலிங்கம் ரூ.227 கோடி, நத்தம் விஸ்வநாதன் ரூ.197 கோடி, பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.217 கோடி என மொத்தம் ரூ.646 கோடி பெற்றிருக்கிறார்கள். இந்தத் தொகை தேசிய ஊரக சுகாதார இயக்கம் என்று எழுதப்பட்டு, இந்திய அரசின் சின்னம் பொறிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டன. இதை நாம் கூறவில்லை.
2017ஆம் ஆண்டில் வருமான வரித்துறையின் தலைமை இயக்குநர் இதுகுறித்த ஆதாரங்களை வருமான வரித்துறையின் தலைமை விசாரணை அதிகாரிக்கு ஒரு குறிப்பை அனுப்பியிருக்கிறார். இதுகுறித்து, விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், வருமான வரித்துறை கடந்த 4 ஆண்டுகளாக எடுத்த நடவடிக்கை என்ன? தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கண்ட தொகையை அதிமுகவுக்கு வழங்கிய நிறுவனம் எஸ்.ஆர்.எஸ். மைனிங் கம்பெனி. இதன் இயக்குநர் ஜெ.சேகர் ரெட்டி. தமிழகம் முழுவதும் இந்தத் தொகையைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு இந்நிறுவனம் வழங்கியிருக்கிறது.
இவர்கள்தான் நெடுஞ்சாலைத்துறையிலும், மணல் கொள்ளையிலும் ஈடுபட்டவர்கள். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, ஜெ.சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.140 கோடி ரொக்கம், புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாகப் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து, வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை என்ன? அமலாக்கத்துறை இதுபற்றி விசாரித்ததா?
அதிமுகவின் ஊழல் இத்துடன் நிற்கவில்லை. 2017 ஏப்ரல் 7 அன்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியதில், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணப் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. அதைத் தவிர, ரூ.5.5 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியானது. இதுகுறித்து, வருமான வரித்துறை வழக்குத் தொடர, மத்திய புலனாய்வுத்துறைக்குப் பரிந்துரை செய்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக மத்திய புலனாய்வுத்துறை இதில் என்ன நடவடிக்கை எடுத்தது? விசாரணை நடத்தியதா? வழக்குப் பதிவு செய்யப்பட்டதா?
முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் 2016 செப்டம்பர் 12 அன்று நாற்பது இடங்களில் வருமான வரித்துறை சோதனையிட்டது. இதில், ரூ.200 கோடி கரூர் சி.பி.அன்புநாதன் என்பவர் மூலம் ஹாங்காங்கிற்கு ஹவாலா பணப் பரிமாற்றம் நடந்ததாக வருமான வரித்துறை கண்டுபிடித்தது. இதுகுறித்து வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை என்ன?
இறுதியாக, நேர்மையைப் பற்றியும், யோக்கியதையைப் பற்றியும் பேசுகிற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி குற்றம் சாட்ட விரும்புகிறோம். உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்தபோது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதை விசாரித்த சிபிசிஐடி குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று கூறியதை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏற்கவில்லை. மாறாக, குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, இவ்வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க 2018 அக்டோபர் 12இல் ஆணையிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் தடையாணை பெற்றார். இதற்குத் தடை வழங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இன்றைக்கு பாஜகவின் தயவால் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்குவதற்கு மத்திய புலனாய்வுத்துறை என்ன நடவடிக்கை எடுத்தது? இதுகுறித்து, சிபிஐ பாராமுகமாக இருப்பது ஏன்? இதன்மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எடப்பாடி பழனிசாமியைப் பாதுகாத்து வருகிறார் என்று குற்றம் சாட்ட விரும்புகிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிபிஐயின் பிடியில் இருப்பதால், மத்திய பாஜக அரசை எதிர்த்துப் பேசுகிற துணிவற்றவராக இருக்கிறார். இதனால் தமிழகத்தின் நலன்கள், உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிற பாஜகவுக்குப் பாடம் புகட்டவும், அதிமுகவின் அராஜக ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டவும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கவும் மக்கள் தயாராகி விட்டார்கள்.
அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி முழு தோல்வியடைந்த பாஜக, அதிமுக கூட்டணியினர் கடைசி நேரத்தில் எதிர்க்கட்சிகள் மீது வருமான வரித்துறையை ஏவிவிட்டிருக்கிறார்கள். இதை முறியடித்து மக்களின் பேராதரவோடு திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைந்து, வளர்ச்சிப் பாதையில் தமிழகம் பீடுநடை போடும் என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன்”.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.