கொல்கத்தா

ங்கை நதி சுத்தீகரிப்புக்காக பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை என நதி நீர் ஆர்வலர் ராஜேந்திர சிங் கூறி உள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய நதியான கங்கை நதி மாசுபட்டு வருவது குறித்து பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.   கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கங்கை நதி முழுமையாக சுத்திகரிக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது.   அதை தொடர்ந்து கங்கை சுத்திகரிப்பு திட்டங்களை பாஜக அறிவித்தது.

நதி நீர் ஆர்வலரான ராஜேந்திர சிங் தனது உதவியாளர்களான சினேகல் தோந்தே மற்றும் சஞ்சய் அகர்வால் ஆகியோருடன் கடந்த அக்டோபர் மாதம் கங்கை நதி செல்லும் வழியில் பயணம் மேற்கொண்டார்.    இந்த பயணத்துக்கு கங்கா சத்பவன யாத்திரை என பெயரிடப்பட்டது.   கங்கை நதி உற்பத்தியாகும் கோமுக் மலையில் இருந்து கங்கை நதி கடலில் கலக்கும் கொல்கத்தா வரை அவர்கள் பயணம் செய்தனர்.

தற்போது அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் பயணம் செய்து வருகின்றனர்.   வரும் 12 ஆம் தேதி அன்று முடிய உள்ள இந்த பயணம் குறித்து ராஜேந்திர சிங் செய்தியாளர்களிடம், “கங்கை நதி பாழாகி வருவதன் காரணம் மாசுக் கலப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் ஆகும்.  அவற்றை சரி செய்யாத மோடி அரசு நீர் வழிப் போக்குவரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது எப்படி என்றால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டவருக்கு அதற்கான சிகிச்சை செய்யாமல் பல்லுக்கு மருந்து போடுவது  போன்றதாகும்.   இந்த நான்கரை வருட ஆட்சியில் மோடி கங்கை சுத்திகரிப்புக்காக எதுவும் செய்யாமல் உள்ளார்.   நான் இந்த பயணத்தில் 11 மாநிலங்களில் 2250 கிமீ தூரம் சென்றுள்ளேன்.

பிரதமர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கங்கை நதியை இந்துக்களுக்கு சொந்தமானது என்னும் அடிப்ப்டையில் அணுகுகின்றனர்.   இது பிரித்தாளும் அரசியலுக்கு மட்டுமே உதவும்.  கங்கை நதி என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாகும்.    ஆட்சிக்கு வரும் முன்பு மோடி தன்னை கங்கையின் மைந்தன் என கூறி வந்தார்.

அதனால் மக்கள் கங்கை நதியை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என நம்பினர்கள்.    அத்துடன் இந்த நடவடிக்கையை மூன்றே மாதங்களில் முடிப்பதாக அவர் சொன்ன போது நாங்கள் மிகவும் எதிர்பார்ப்புட்ன் இருந்தோம்.   ஆனால் மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் கங்கையின் குறுக்கே கட்டப்படும் 4 அணைகளின் கட்டுமானப் பணிகளைக் கூட அவர் நிறுத்தவில்லை.

அவர் கங்கை மேம்பாட்டுக்காக ஒரு அமைச்சரவை அமைத்து அதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழலுக்கு வழி செய்துள்ளார்.   ஆனால் மோசமான நிலையில் உள்ள கங்கை நதி மாறாமல் உள்ளது.    இதை விட முன்னாள் பிரதமர்  மன்மோகன் சிங் ஏற்கனவே 60% கட்டுமானப் பணிகள் முடிந்த 3 அணைகள் கட்டுவதை நிறுத்தியதை பாராட்டலாம்” என தெரிவித்துள்ளார்.