ராஜ்கோட் :

குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்கோட்டில் பேசுகையில், ‘‘ ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி நடந்த 10 ஆண்டு காலத்தில் 5வது ஆண்டிலேயே நாட்டின் பொருளாதாரம் 10.6 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. இது போல் மீண்டும் நடந்தால் மகிழ்ச்சி.

ஆனால் அப்படி நடக்க முடியாது என்று நினைக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் விவகாரங்கள் கடுமையாக கையாளப்பட்டது. ஆனால் பா.ஜ.க அப்படி இல்லை.

ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நர்மதா விவகாரம் குறித்து என்னிடம் பேசியதாக மோடி தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்படி எதையும் அவர் பேசியதாக நினைவில்லை. அவர் என்னை சந்திக்க வந்திருந்தால் மறுத்திருக்க மாட்டேன். பிரதமராக இருந்த போது அனைத்து முதல்வர்களையும் சந்திக்க வேண்டியது எனது பொறுப்பு. அதனால் அனைத்து மாநில முதல்வர்களையும் சந்திக்க எப்போதும் தயாராக இருந்துள்ளேன்.

குஜராத் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு மோடி துரோகம் செய்துவிட்டார். பாஜக.வினர் பொய்களை பேசி வருகின்றனர். மக்களை எப்போதாவது வேண்டுமானால் பொய் சொல்லி ஏமாற்றலாம். ஆனால், எப்போதும் மக்களை பொய்களை சொல்லி ஏமாற்றலாம் என்று நினைத்துவிட கூடாது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘மத்திய சீரற்ற வெளிநாட்டு கொள்கைகளால் நாட்டின் பாதுகாப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு எடுத்த சில நடவடிக்கைகள் சிறப்பானதாக இல்லை. பணமதிப்பிழப்பின் போது ஏராளமான கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது.

லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படவில்லை. எங்களின் எந்த நடவடிக்கையும் ஏழைகளை பாதிக்கவில்லை. பணமதிப்பிழப்பு போன்ற மிகப் பெரிய தவறுகளை செய்ய மாட்டோம். பாஜக.வினர் பொய்களை பேசி வருகின்றனர்’’ என்றார்.