குஜராத்: விவசாயமும் பாதித்ததால் தான் பாஜக மீது படேல் சமூகம் கோபம்

காந்திநகர்:

குஜராத்தில் பட்டிதார் சமூகத்தினர் இடஒதுக்கீடு பிரச்னையால் மட்டும் பாஜக.வுக்கு எதிராக இல்லை. விவசாய வருவாய் இழப்பு தான் முக்கிய காரணமாக உள்ளது.

குஜராத்தில் படேல் சமூக மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். விவசாயிகள் நலன் காக்க மத்திய பாஜக அரசும், மாநில அரசும் எதுவும் செய்யவில்லை என்று அந்த சமூக மக்கள் மிகவும் கோபத்துடன் உள்ளனர். குஜராத் நகர் புறத்தில் பட்டிதார் மக்கள் தொழில்களை நடத்தி வருகின்றனர். அதேபோல் கிராமப் பகுதிகளில் அவர்கள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். பட்டிதார் அல்லாத ம க்களும் விவசாய வருவாய் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

சவுராஷ்டிரா மண்டலத்தில் படேல் சமூகத்தின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. வடமேற்கு பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் இருந்து 48 எம்எல்ஏ.க்கள் தேர்வு செய்யப்பட்டு சட்டமன்றத்துக்கு அனுப்பி வை க்கப்படவுள்ளனர்.

இங்கு பருத்தி மற்றும் கடலை சாகுபடி மிகப்பெரிய அளவில் உள்ளது. இங்கு விவசாய இடு பொருட்கள் உள்பட அனைத்து வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. அதேசமயம் வருவாயும் கடுமையாக பாதித்துள்ளது.

20 கிலோ பருத்திக்கு அரசு ரூ. 900 வழங்குகிறது. இதேபோல் கடலை விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தனியார் 20 கிலோ கடலைக்கு ரூ. 500 முதல் ரூ. 600 மட்டுமே வழங் குகின்றனர். பருத்திக்கு குறைந்தபட்ச விலையாக ஆயிரத்து 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்படும் என்று மோடி உறுதி அளித்திருந்தார்.

குஜராத் மக்கள் தொகையில் 60 மில்லியன் பேர், அதாவது 57 சதவீத மக்கள் கிராமப் புறத்தில் உள்ளனர். இவர்களுக்கு விவசாயம் தான் பிரத்யேக தொழில். மாநிலத்தில் 20 மில்லியன் தொழிலாளர்களில் 4.8 மில்லியன் பேர் விவசாய தொழிலாளர்கள். இவர்களது வருவாய் 4.5 மில்லியன் பேர் வைத்துள்ள விவசாய நிலத்தை நம்பியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக பருத்தி விவசாயிகள் மோசமான நிலையில் உளளனர். 2015ம் ஆண்டில் மழை குறைவு காரணமாக சாகுபடி பாதித்தது. அடுத்த ஆண்டு பூச்சி தொல்லையில் சிக்கி பருத்தி அழிந்தது. இ ந்த ஆண்டு உரிய விலை இல்லாமல் பாதித்துள்ளது. குஜராத்தில் கடலை சாகுபடி சாதனை படைத்து வருகிறது. ஆனால் இதை கடலை விவசாயிகள் கொண்டாட முடியவில்லை. வருவாய் குறைந்ததால் கூலித் தொழிலாளிகளுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளின் கோபத்தை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குறைந்தபட்ச விலை முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்று ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார். விவசாய கடன் தள்ளுபடிக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 10வது நாளில் கொள்கை வடிவம் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வரும் 9ம் தேதி சவுராஷ்டிரா மண்டலத்தில் மக்களின் வாக்குகளை அறுவடை செய்வது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Gujarat: Patel community is angry with the BJP because of the impact of agriculture