டில்லி

ந்திய மக்கள் அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்  கொள்ள வேண்டும் எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நேற்று குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள தரம்பூரில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.  இவற்றைப் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.   அவற்றில் தரம்பூர் ராஜ் சந்திரா மருத்துவமனை திறப்பு விழா, மற்றும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை அடங்கும்.

பிரதமர் மோடி தனது உரையில், “இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை யொட்டி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கரோனா பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. ஏற்கனவே இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கண்டிப்பாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களுக்கு சேவை ஆற்ற ராஜ் சந்திரா அறக்கட்டளை போன்று அனைத்து தொண்டு நிறுவனங்களும் முன்வர வேண்டும்.  மக்களுக்குத் தரமான மருத்துவச் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் ஆரோக்கியமான இந்தியா உருவாகும்.

மத்திய அரசு பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் அனைத்துத் தடைகளையும் நீக்க முயற்சி மேற்கொண்டு பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.