ஐதராபாத்:

இந்தியா வரும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்காவுக்கு உலக்கின் மிகப்பெரிய டைனிங் டேபிளில் விருந்து கொடுக்க இருக்கிறார் பிரதமர் மோடி. சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு வருகிற 28-ம் தேதி ஐதராபத் நகரில் நடைபெற இருக்கிறது.

இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார். மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொள்கிறார். அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவாங்காதான், தலைமை தாங்கி அழைத்து வருகிறார்.

இவாங்கா வருகையை அடுத்து ஐதராபாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இவாங்காக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. முதல் இரண்டு அடுக்குகளில் அமெரிக்க ரகசிய போலீசார் இருப்பார்கள். தவிர, பத்தாயிரம் இந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இவாங்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதால் மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றி 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இவாங்கா டிரம்ப் பயணம் செய்ய அமெரிக்க உளவுப்படையின் குண்டு துளைக்காத புல்லட்‘புரூப்’ கார்களை கொண்டு வரப்படுகிறது.

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் அமெரிக்காவில் இருந்து வந்திறங்கியிருக்கின்றன. அமெரிக்க அதிபருக்குரிய பாதுகாப்பு, இவாங்காவுக்கு அளிக்கப்படுவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். இவாங்காவுக்கு பிரதமர் மோடி விமரிசையாக விருந்தளிக்கிறார்.

வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையில் இந்த விருந்து அளிக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய விருந்து மண்டபம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஒரே நேரத்தில் 2000 பேருக்கும் மேல் கலந்துகொள்ளலாம். ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா சார்மினார், லாட்பஜார் உள்பட முக்கிய சுற்றுலாதளங்களை பார்வையிடுகிறார்.

இவரது வருகையை ஒட்டி, ஐதராபாத் நகரில் இருந்த பிச்சைக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். (இது குறித்து ஏற்கெனவே பத்திரிகை டாட் காம் இதழில் செய்தி வெளியிட்டுள்ளோம்.)