டில்லி

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அரசு நிறுவனங்களை விற்பனை செய்வதற்குக்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.  இதனால் அரசின் நிதிநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.   இந்த நிதி நெருக்கடியைச் சீர் செய்ய நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்தது.   இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் எல் ஐ சி மற்றும் ஐடிபிஐ ஆகியவற்றில் அரசிடம் உள்ள பங்குகளில் ஒரு பகுதியைத் தனியாருக்கு விற்பதாக அறிவிக்கப்பட்டது.    இந்த இரண்டுமே தற்போது லாபத்தில் இயங்கி வருவதால் இதற்கு நாடெங்கும்  கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

டில்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் கலந்துக் கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடி ‘மேக் இன இந்தியா’ என்னும் திட்டத்தை அறிவித்தாரே தவிர அதை நிறைவேற்ற ஒரு சிறு தொழிற்சாலையைக் கூட நிறுவவில்லை.

மாறாக அவர் பல உற்பத்தி நிறுவனங்களை விற்பனை செய்து வருகிறார்.   அடுத்ததாகப் பிரதமர் மோடியும் பாஜகவினரும் ஏர் இந்தியா, இந்தியன் ஆயில், இந்துஸ்தான, பெட்ரோலியம்,  ரெயில்வே ஆகியவற்றின் வரிசையில் தாஜ்மகால், செங்கோட்டை   ஆகியவற்றையும் விற்று விடுவார்கள்.” என உரையாற்றி உள்ளார்.