டில்லி,
பாரதியஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நவ.8 – டிச.31 வரையிலான வங்கி பரிவர்த்தனைகளை கட்சி தலைமையிடம் சமர்ப்பிக்க பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் தங்கள் வங்கிக் கணக்கின் பரிவர்த்தனைகளை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
பாரதியஜனதா கட்சியினரின் நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது அதில் பேசிய மோடி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது கடந்த  நவம்பர் 8 முதல் பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அன்று முதல்  இந்த ஆண்டு கடைசி ( டிசம்பர் 31) வரையிலான  வங்கிப் பணப் பரிவர்த்தனை விவரங்களை முழுமையாக கட்சி தலைமையிடம்  சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று  மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முன்னுதாரணமாக பாஜக திகழ வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி இத்தகைய அணுகுமுறையை கையாள்வதாக கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
மேலும், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு  கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கான நடவடிக்கை அல்ல என்றும், ஏழை மக்களிடம் இருந்து சூறையாடப்பட்ட கறுப்புப் பணத்தை முறைப்படி மக்களின் நலனுக்கு பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட வழிமுறை என்றும் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தொகுதி களில் உள்ள வர்த்தகர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதாவது, ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி, அதை வர்த்தகர்கள் நடைமுறைப்படுத்த வழிவகுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.