சென்னை: சென்னையில் இன்று அதிகாலை காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழையில், பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், 29 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது..
இந்த நிலையில் சென்னையில் நேற்று வெயில் வாட்டி வதைத்தது. இதன் தாக்கம் எப்படி என்பது மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் தொண்டர்கள், கூடாரத்தின்மீது போடப்பட்டிருந்த துணிகளை தலைமீது போட்டுக்கொண்டு அமர்ந்திருந்ததை பார்த்தோம். அந்தளவுக்கு வெயில் கொளுத்தியது.
இதைத்தொடர்ந்து, இரவு முதலே வானத்தில் மேகமூட்டங்கள் காணப்பட்டன. இதை பார்ப்பதற்கே அழகாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை 4.30 மணி முதல் பரவலாக சென்னை மட்டுமின்றி பல மாவட்டங்களலும் மழை பெய்தது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.
சென்னை நுங்கம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர், நங்கநல்லூர், ஆலந்தூர், மீனம்பாக்கம், அடையாறு, அசோக்நகர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வடசென்னையின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டியது.
ராஜா அண்ணாமலைபுரத்தில் 10 செ.மீ, அடையாறு 9 செ.மீ, ஈஞ்சம்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 8 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 6.7 செ.மீ, நீலாங்கரை, வடபழனி, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ மழை கொட்டித் தீர்த்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்த மழை காரணமாக, அதிகாலையில், தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், தற்காலிகமாக போக்குவரத்தை தடை செய்ததுடன், தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி தொழிலாளர்களை ஈடுபட வைத்தனர். இதையடுத்து தண்ணீர் வெளியேறியதும், காலை 8மணி முதல் மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்று முற்பகல் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் தென்காசி மாவட்டங்களின் ஓரிரு பகுதிகள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.