சென்னை: தமிழகத்தின் 37 மாவட்டங்களில் தலா ஒரு கிராமத்தை மாதிரி சூரியசக்தி கிராமங்களாக மாற்ற, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசின் பசுமை ஆற்றல் கழகம் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஆலோசகர்களை நியமிக்க உள்ளது.
மத்திய அரசின் ‘பிரதமர் சூரிய உதய் – இலவச மின்சாரத் திட்டம்’ (PM Surya Ghar Muft Bijli Yojana)-ன்கீழ், தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து மற்ற 37 மாவட்டங்களிலும் தலா ஒரு ‘மாதிரி சூரியசக்தி கிராமத்தை’ உருவாக்க தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் (TNGECL) முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் மாநிலங்களவையில், இதுதொடர்பான கேள்விக்கு பதில்கூறிய மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் , மத்திய அரசு பிப்ரவரி 2024-ல் பிரதமரின் சூரிய சக்தி வீடு: இலவச மின்சாரத் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி, 2026-27 நிதியாண்டிற்குள் ரூ.75,021 கோடி செலவில் குடியிருப்புப் பகுதிகளில் ஒரு கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய சக்தி மின்தகடுகள் நிறுவுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
09.12.2025 நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 19,45,758 வீடுகளின் மேல் சூரிய சக்தி மின்தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் 48,652 வீடுகளிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2,066 வீடுகளிலும் சூரிய சக்தி மின்தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் 24,35,196 குடும்பங்கள் பயனடைகின்றன. கூடுதலாக, கிராமப்புற வீடுகள் அல்லது பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது என தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு 37 மாவட்டங்களிலும் தலா ஒரு ‘மாதிரி சூரியசக்தி கிராமத்தை’ உருவாக்க தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் (TNGECL) முடிவு செய்துள்ளது. கிராமப்புறங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மின்சாரத் தேவையில் சுயமாக இயங்கும் நிலையை எட்டவும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த மாதிரி கிராமங்கள், எதிர்காலத்தில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள பெரிய அளவிலான சூரியசக்தி திட்டங்களுக்கு ஒரு முன்னோடியாக (Benchmark) அமையும்.
இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) தயாரிப்பதற்குத் தகுதியான ஆலோசகர்களை அல்லது ஆலோசனை நிறுவனங்களை நியமிக்க தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கான ‘விண்ணப்பக் கோருதல்’ (Request for Selection) நடைமுறை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 37 கிராமங்களின் சூரியசக்தி உற்பத்தித் திறன் மற்றும் உள்ளூர் மின் தேவையை மதிப்பீடு செய்ய உள்ளது. வீட்டுக்கூரை சூரியசக்தி அமைப்புகள் (Rooftop Solar), சமூக சூரியசக்தி பண்ணைகள் (Community Solar Farms) மற்றும் கலப்பு எரிசக்தி முறைகளில் எது சிறந்தது எனப் பரிந்துரைக்க உள்ளது. தொழில்நுட்ப வடிவமைப்பு, திட்ட மதிப்பீடு, நிதி நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரி கிராமங்களில் வெறும் சூரிய ஒளி தகடுகள் மட்டுமின்றி, பல்வேறு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சூரியசக்தி தெருவிளக்குகள், மேற்கூரை மின் உற்பத்தி அமைப்புகள், நீரேற்று மின் சேமிப்பு நிலையங்கள், உள்ளூர் எரிசக்தி இடைவெளியைக் குறைக்க உயிரி எரிபொருள் (Biomass) ஆலைகள் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு இலவசம் அல்லது மானிய விலையில் மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்படும். இது காலநிலை மாற்றத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், மின்சாரத்திற்காகப் பாரம்பரிய மின் உற்பத்தி நிலையங்களைச் சார்ந்திருக்கும் நிலையையும் கணிசமாகக் குறைக்கும். மக்களின் பங்களிப்புடன் கூடிய பசுமை ஆற்றல் புரட்சிக்கு இது ஒரு தொடக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இலவச மின்சாரம்: ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம், இதன் மூலம் மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்கலாம்.
- மானியம் & கடன்: சோலார் பேனல் நிறுவ மத்திய அரசின் மானியம் (2kW வரை 60% வரை), குறைந்த வட்டியில் வங்கிக் கடன்கள்.
- நிகர மீட்டரிங் (Net Metering): உபரி மின்சாரத்தை gride-க்கு திருப்பி அனுப்புவதன் மூலம் மின் கட்டணத்தில் சரிசெய்தல்.
- ஒரு கோடி வீடுகள்: நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் rooftop solar panels நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேசிய போர்டல்: ஆன்லைனில் விண்ணப்பிக்க தேசிய சோலார் ரூஃப்டாப் போர்ட்டல் உள்ளது.
- குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மின்சாரக் கட்டணச் சுமையிலிருந்து நிவாரணம்.
- தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவித்தல்.
- மின்சாரத் துறையில் சுய சார்புநிலையை அதிகரித்தல்.
- இந்தியாவில் உள்ள எந்தவொரு குடியிருப்பு வீட்டின் உரிமையாளரும் விண்ணப்பிக்கலாம்.
- தேசிய சோலார் ரூஃப்டாப் போர்ட்டல் (National Portal for Rooftop Solar) மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு பசுமை ஆற்றல் கழகம்
தமிழ்நாடு அரசு பசுமை ஆற்றல் கழகம் (Tamil Nadu Green Energy Corporation Limited – TNGECL) என்பது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், பசுமை ஆற்றல் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தமிழ்நாடு அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (TEDA) மற்றும் TANGEDCO-வின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பிரிவை ஒருங்கிணைத்து 2024 ஜூலையில் தொடங்கப்பட்டது. சூரிய சக்தி, காற்றாலை மின் உற்பத்தி, பேட்டரி சேமிப்பு அமைப்புகள் (BESS) போன்ற திட்டங்களில் கவனம் செலுத்தி, 2030-க்குள் 50,000 மெகாவாட் இலக்கை அடையவும், பசுமை ஆற்றல் மாற்றத்தை முன்னெடுக்கவும் இது முக்கியப் பங்காற்றுகிறது.
ரூ.5000 வரை குறைவு: ஜிஎஸ்டி வரி குறைப்பால் மலிவானது சோலார் பேனல் விலை!