த்திய பாஜக அரசுதான்,  தமிழக அரசை ஆட்டிப்படைக்கிறது என்பது பலவித நடவடிக்கைகள் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது.

ஜெயலலிதா இறந்தபோது, மத்திய அரசு விரும்பிய உதய் திட்டம், பறக்கும் சாலை போன்ற திட்டங்களை எதிர்த்து வந்தார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு தமிழக அரசு ஏற்றது.

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்கள் விருப்பம் இன்றி நிறைவேற்ற மாட்டோம் என்று உத்தரவாதம் கொடுத்த மத்திய அரசு, இப்போது, “இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்” என்று உறுதியாக இருக்கிறது.

“இத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசுதான் தரவேண்டும். நாங்கள் தரப்போவதில்லை. ஆகவே திட்டம் வராது” என்று மக்கள் போராட்டம் நடத்தியபோது கூறிய தமிழக அரசு, இப்போது மவுனமாக இருக்கிறது.

மாநில தலைமைச்செயலார் ( அறை), மாநில அமைச்சர் உள்ளிட்டோர் மீது வருமானவரித்துறை சோதனை நடவடிக்கை எடுத்தும் வாய்மூடி கிடக்கிறது எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை.

இப்படி பாஜகவின் தொங்கு சதையாக தமிழக அரசு இருக்கிறது என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்.

இப்போது எல்லாவற்றுக்கும் மேலாக, மத்திய பாஜக அரசின் மூன்றாண்டு சாதனைகளை எடப்பாடி பழனிச்சாமியின் தமிழக அரசு சாதனை மலராக வெளியிடப்போகிறது.

ஆம்… தமிழக அரசின் சாதனைகளை மலர்களாக வெளியிட்டு வந்த, மாநில செய்தி மக்கள் தொடர்பு துறை, முதன் முறையாக மத்திய பா.ஜ., அரசின் சாதனைகளை, முரசுகொட்டப்போகிறது.

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர், குமரகுருபரன், மத்திய அரசின், மூன்றாண்டு சாதனை மலர் தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார்.

இது தொடர்பாக அவர், ‘மத்திய அரசின் திட்டங்களை தொகுத்து, வெற்றிக் கதைகளாகவழங்க வேண்டும்’ என, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், “இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகவும், பயனுக்காகவும், மத்திய அரசு எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும், மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான தகவல்களை, சம்பந்தப்பட்ட மத்திய அரசு அலுவலர்களை அணுகி பெற வேண்டும்.
அவற்றை, புகைப்படங்களுடன், வெற்றிக் கதையாக, கலெக்டர் ஒப்புதல் பெற்று, தலைமையிடத்துக்கு தபால் மூலமாகவும், jdfieldpublicity@gmail.com என்ற இ – மெயில் முகவரிக்கும், மே, 11க்குள் அனுப்பி வைக்க வேண்டும்” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்படுகிறது.

23ம் புலிகேசி படத்தில் வரும் புகழ்பெற்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது:

படுத்தேவிட்டானய்யா!