ஆஜ்மீர்: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் சிறந்த முறையில் அமல்படுத்தப்படுவதை ஒட்டி, மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

ராஜஸ்தான் துணை முதல்வராக இருப்பவரும், பஞ்சாயத்து ராஜ் துறையை கவனிப்பவருமான சச்சின் பைலட், இந்த திட்டத்தின் மீது தனி அக்கறை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த பாரதீய ஜனதா ஆட்சியில், இத்திட்டம் குறித்து அக்கறை செலுத்தப்படாததால், குறைந்தளவு நபர்களே பணி வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். முந்தைய அரசு, ஸ்வாச் பாரத் அபியான் திட்டத்திலேயே அக்கறை செலுத்தி வந்ததால், ஏராளமானோர் முறையான வேலைவாய்ப்பின்றி தவித்தனர்.

மேலும், ஸ்வாச் பாரத் திட்டத்தின்கீழ், சரியான ஏற்பாடுகளின்றி பல இடங்களில் கழிவறைகள் கட்டப்பட்டு, அதேசமயம் தண்ணீர் வசதியின்றி அவை பயன்படாமல் போயின என்பது கவனிக்கத்தக்கது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு பதவியேற்புக்கு முன்னதாக, வெறும் 9 லட்சம் நபர்களே, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயன்பெற்று வந்தனர். தற்போது புதிய அரசமைந்த சில மாதங்களில் அந்த எண்ணிக்கை 28.80 லட்சம் பேராக அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.