சென்னை:

நடிகல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமா என்பதே கேள்விக்குறியாகி வருகிறது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவ்வப்போது பல கருத்துக்களை கூறி  மக்களை கமல்ஹாசன் குழப்பி வருவதால், அவரது கட்சியினரிடையே சந்தேகம் வலுத்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவர் நடிகர் கமல்ஹசான் அவ்வப்போது பல்வேறு கருத்துக்களை தெரிவித்து மக்களை குழப்பி வருகிறார்.

எப்போதுமே தன்னை அதிமேதாவியாக காட்டிக்கொள்ளும் கமல்ஹாசன், அரசியல் கட்சி தொடங்கியபிறகு பல்வேறு அரசியல் அதிரடி கருத்துக்களை கூறி வருகிறார். அவரது கருத்துக்கள் என்ன என்பது பலருக்கு புரியாத நிலையில்,  சமூக வலைதளங்களில் அவரது கருத்தை வரவேற்று ஒரு தரப்பினரும், அவரது கருத்துக்கு எதிர் கருத்து கூறி ஒரு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்தும்  கமல்ஹாசன் இருவேறு கருத்துக் களை கூறி மக்களை குழப்பி உள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொடக்கத்தில் பாஜக ஆட்சியை  வரவேற்றம்,  பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை ஆதரித்தும் அறிக்கைகள் விட்ட கமல்ஹாசன், பின்னர்  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து  காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்திப்பது போன்ற ஒரு கருத்தை உருவாக்கி வந்தார்.

அதுபோல, உச்சநீதி மன்றத்தின், கள்ள உறவு தப்பில்லை என்ற தீர்ப்பை வரவேற்ற கமல் ஹாசன்,  திருமணத்தை தாண்டிய உறவு குற்றமில்லை என்றும், அதை தமது கட்சி வரவேற்ப தாகவும் தெரிவித்தவர், சபரிமலை விவகாரத்தில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று நழுவிக்கொண்டார்.

கமலின் இரட்டை வேடம்  குறித்து அவரது ரசிகர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும் தலையை பிய்த்துக்கொண்டு திரியும் வேளையில், தற்போது, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் குழப்பி வருகிறார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்த கமல்ஹசான், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம்  தனித்து போட்டியிடும் என்று தெரிவித்தார்.

ஆனால், அன்றைய தினமே மற்றொரு ஊடகத்துக்கு பேட்டியளித்த கமல், பாராளுமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சிகளின் கூட்டணியுடன் மக்கள் நீதி மய்யம் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

ஒரேநாளில் இரு வேறு ஊடகங்களுக்கு இரு வேறு கருத்துக்களை கூறியுள்ள கமல்ஹாசன் உண்மையிலேயே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போகிறரா? அல்லது தனது கட்சியினரையும், ரசிகரையும் தக்க வைத்துக்கொள்ள இதுபோன்று குழப்பி வருகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே கமலின் நடவடிக்கை குறித்து அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், அவர் ஒரு குழப்பவாதி என விமர்சித்து வரும் நிலையில், அவரது தற்போதைய நிகழ்வுகளும் அதை நிரூபிக்கும் வகையிலேயே இருந்து வருகிறது..