சென்னை,

எம்எல்ஏக்கள் விற்பனை (MLAs For Sale) என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியதும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கேள்வி பதில் விவாதம் நடைபெற்றது. திமுகவினரின் ஐசிஎப் மேம்பாலம் குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.

தொடர்ந்து மதுரை சரவணன் எம்எல்ஏ பேசிய வீடியோ குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், இதுகுறித்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் கூறிவிட்டார்.

மேலும் பணம் பெற்றதாக கூறப்படுவதை  சம்மந்தப்பட்ட எம்எல்ஏ மறுத்துள்ளதால் சபையில் பேச வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் சபையில் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார்.

இந்த தீர்மானம் தொடர்பாக விவாதிக்க சபாநாயகர் மறுத்ததை தொடர்ந்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு வருகின்றனர்.

மேலும் கூவத்தூர் வீடியோ குறித்து துரைமுருகன் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

கடும் அமளிக்கிடையில் M.L.As For Sale  என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் பேரவையில் திமுக உறுப்பினர்கள் ஜனநாயகத்தை விற்காதே என்று முழக்கமிட்டு வருகின்றனர்.

இந்த கூச்சலுக்கிடையே, வணிவரித்துறை அமைச்சர் வீரமணி ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்தார்.