சென்னை:
சென்னை பல்லாவரத்தில் ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். மதுரை- நத்தம் இடையே 7.3 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை திறந்துவைத்தார்.
அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் புதிய முனையம் அமைத்ததுத் தந்ததற்கு நன்றி. சென்னை – மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும். அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும். சென்னை- மதுரவாயல், சென்னை- தாம்பரம் உயர்மட்ட சாலைகள், கடற்கரை சாலைகளை நான்கு வழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்து வேண்டும். சென்னை- மதுரை நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.சிறந்த சாலை கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளோம் மக்களுக்கு நெருக்கமானவை மாநிலங்கள் என்பதால் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் கடமை மாநில அரசுக்கு உள்ளது. மாநிலங்களின் நிதி தேவை மாநில மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தேவை. ஒன்றியத்தில் உண்மையான கூட்டாட்சி இருக்க வேண்டுமானால் மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும். சமூக வளர்ச்சி திட்டங்களோடு உள் கட்டமைப்பையும் தமிழ்நாடு அரசு சீர் செய்துவருகிறது.கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் ” என்றார்.