சென்னை:
கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தமிழ்நாட்டிற்கு அதிகளவிலான தடுப்பூசிகளை வழங்கிடுமாறும், மருந்து கொள்முதலில் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் 20 லட்சம் தடுப்பூசிகளை வழங்கிட வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் மக்கள் தடுப்பூசி இல்லை என திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு – ஒருபுறம் தடுப்பூசிகளின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறது என்றும் மறுபுறம் ஏழை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடுகிறது என்றும் ஸ்டாலின் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே மாநிலங்களே தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஏதுவாக மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், தமிழக அரசு கேட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.