திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நாளை கீழடிக்கு சென்று அகழாய்வு பணிகளையும், அங்கு கிடைத்துள்ள பொருட்களையும் பார்வையிட உள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலிருந்து சிவகங்கைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள கீழடி பகுதியில் தொல்லியல்துறை சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கிடைத்துள்ள பொருட்களை வைத்து, 2600 ஆண்டு பழமை வாய்ந்த நாகரீகத்தை கொண்ட நகரமாக கீழடி இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் மற்றும் தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைதளத்தில் தமிழரின் பண்பாடு குறித்து பலரும் பெருமையுடன் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நாளை கீழடிக்கு செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் அகழாய்வு பணிகளை பார்வையிடும் அவர், ஆய்வின் போது கிடைத்த பொருட்களையும் பார்வையிட உள்ளார்.