வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தனது 2ம் கட்ட பிரச்சாரத்தை அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று துவக்க உள்ளார்.

வேலூர் தொகுதியில் மக்களவை தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மற்றும் வேட்பு மனு பரீசிலனை முடிவடைந்ததை தொடர்ந்து, வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக கூட்டணி கட்சியினர் சார்பில் மூத்த தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் பணிக்குழுக்களும் அமைக்கப்பட்டு திமுகவினருடன் இணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடந்த மாதம் 26ம் தேதி முதல் வேலூரில் 3 நாட்கள் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், தனது இரண்டாம் கட்ட பிரசாரத்தை வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இன்று முதல் மு.க ஸ்டாலின் தொடங்க உள்ளார்.  இன்று மாலை 4 மணிக்கு ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிட்டாளம், வீராங்குப்பம், வடச்சேரி, மதனாஞ்சேரி, செங்கிலிகுப்பம், ஆம்பூர் நகரம் ஆகிய பகுதிகளில் கதிர் ஆனந்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் அவர், நாளை மாலை 4 மணிக்கு குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உமராபாத், பேரணாம்பட்டு, கமலாபுரம், எர்த்தாங்கல், காந்தி சவுக், குடியாத்தம் புதிய பேரூந்து நிலையம், அனைக்கட்டு தொகுதிக்குட்பட்ட பள்ளிகொண்டா ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.