சென்னை: முதலமைச்சரான பிறகு மு.க.ஸ்டாலின் முதன்முதலாக துபாய் பயணமாகிறார். அங்கு நடைபெறும் தொழில் கண்காட்சியில் பங்கேற்ககிறார்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக கவனம் செலுத்துகிறார். அதற்காக, தொழில்துறை சார்பில், வெளிநாடு மற்றும் வெளிமாநில முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு முதலீடுகள் ஏற்பட்டு வருகிறது. அதுபோல, மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், “ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் மாநாடு உள்பட பல்வேறு வழிகளில் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.
இதன் அடுத்த பகுதியாக தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணமாகிறார். 2 நாள் பயணமாக நாளை மாலை விமானம் மூலம் புறப்படும் ஸ்டாலின், மார்ச் 26, 27 ஆம் தேதி முகாமிடுகிறார். துபாயில்) நடைபெறும் தொழில் கண்காட்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து அங்கு பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்திக்கின்றார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
முதலமைச்சருடன், அவரது மகனும், எம்எல்ஏவுமான உதயநிதி உள்பட முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் துபாய்க்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.