சென்னை:
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்றார்.

ஜமால் முகமது கல்லூரியின் புதிய கட்டடத்திற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அவர், உடல்நிலை சரியில்லாததால் கல்லூரி நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க முடியவில்லை என்றும், வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் கல்லூரிக்கு வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கல்விக்கு புகழ்பெற்ற நகரம் திருச்சி. தமிழக அமைச்சர்களாக செயல்பட்டு வரும் கே.என்.நேரு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்.

அதேபோல் இந்தக் கல்லூரியில் படித்த பல்வேறு மாணவர்கள் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு பதவிகளில் உள்ளனர். கல்விக்கு புகழ்பெற்ற நகரம் திருச்சி. அந்த திருச்சியின் சிறந்த கல்லூரி ஜமால் முகமது கல்லூரி. நாட்டுப்பற்று மிக்க சிறந்த ஒரு தலைவர்களால் இந்தக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஜமால் முகமது, இன்னொருவர் காஜா மியான் ராவுத்தர். இருவரும் சுதந்திரத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தேசிய இயக்கத்துடன் மட்டுமல்ல, சுயமரியாதை இயக்கத்திலும் இணைந்து செயல்பட்டவர்.

பள்ளிக்கல்வியில் காமராசர் காலமும், கல்லூரி கல்வியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலமும் சிறப்பாக விளங்கியது. அதுபோல் இந்த ஆட்சியில், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாக இருக்க செயல்பட்டு வருகிறோம். மாணவர்களை பன்முகத்தன்மை கொண்ட திறமைகளை வளர்த்து எடுக்க கல்லூரிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.