சென்னை:
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக டெல்லி பயணமாக உள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராகக் கடந்த மே 7-ம் தேதி பொறுப்பேற்ற நிலையில் கொரோனா காரணமாக அவர் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரைச் சந்திக்காமலிருந்தார். இதையடுத்து கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில், கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது பிரதமரிடம் நீட் தேர்வுக்கு விலக்கு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 19 ஆம் தேதியும் டெல்லி சென்ற முதலமைச்சர் மரியாதை நிமித்தமாகக் குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் 2 நாட்கள் அரசுமுறை பயணமாக டெல்லி செல்லவுள்ளார். செப்டம்பர் 16,17,18 ஆகிய தேதிகளில் டெல்லி செல்லும் ஸ்டாலின், தீன் தயாள் உபாத்தியாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுக கட்சி அலுவலகத்தைத் திறந்து வைக்க உள்ளார். இது முதலமைச்சரின் 3வது டெல்லி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel