சார்ஜா,

மிரகத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் கலந்துகொள்ள நேற்று மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன்  சார்ஜா புறப்பட்டுச் சென்றார்.

ஐக்கிய அரபு எமரேட்சில் உள்ள சார்ஜாவில் ஆண்டு தோறும் 11 நாட்கள் சர்வதேச புத்தக திருவிழா நடைபெறு வது வழக்கம். உலகின் பல நாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படுவார்கள்.

இந்த விழாவில், இந்தியா சார்பாக முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் பங்கேற்க கழகச் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமாள மு.க.ஸ்டாலினை சார்ஜா அரசு நிர்வாகம் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.

அதன்படி, நேற்று சார்ஜ் சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்று வரும் புத்த கண்காட்சியில் பங்கேற்றார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது.,

 

அமீரகத்தில் நடைபெற்றுவரும் 36வது சார்ஜா சர்வதேச புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றி னேன். சார்ஜாவின் அரசர் மாட்சிமைமிகு சுல்தான் அவர்கள் வரலாற்று ஆய்வு மனப்பான்மையும், இலக்கிய ஆர்வம் உடையவராகவும் இருப்பதால் புத்தக ஆணைக்குழுவை உருவாக்கி, புத்தக திருவிழாவை நடத்துவது மட்டுமல்லாமல் சார்ஜா மண்ணின் மைந்தர்களின் வீட்டிற்கு அரசு செலவிலேயே ஓர் நூலகத்தை வழங்கியிருக்கிறார் என்ற செய்தி கேட்டு ஆச்சர்யப்பட்டேன்.

எந்த மொழியாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் தன் மொழி மற்றும் இனத்தின் உரிமைகளைப் பாதுகாக்க, பிறரது ஆதிக்கத்திற்கு ஆட்படாமல் சுயமரியாதையுடன் உயர்ந்து நிற்க முயற்சிப்போர் அனைவருமே திராவிட இயக்கத்துக்கு நெருக்கமானவர்கள் தான். அந்த வகையில் தன் மண்ணின் பெருமையை அறிவு தீபம் ஏற்றி வெளிச்சமிட்டுக் காட்டும் சுல்தான் அவர்கள் போற்றுதலுக்குரியவர் என்றேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள்- திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கியது 1949ல் என்றாலும், 1948ஆம் ஆண்டே ‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை அமைப்போம்’ என்ற பிரசாரத்தை துவக்கியவர்.

சமீபத்தில் ‘தி இந்து’ – தமிழ் நாளிதழ் வெளியிட்ட ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்ற நூலில் என்னுடைய பேட்டியும் இடம்பெற்றிருக்கிறது. அதில் அப்பாவின் (தலைவர் கலைஞர்) எந்தப் பழக்கத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என்ற ஒரு கேள்விக்கு நான் அளித்த பதில்: இரவு படுக்கைக்குப் போகும் போது அவர் கையிலே ஏதாவது ஒரு புத்தகம் இருக்கும். அன்றாடம் நேரில் நூறு பேரையாவது சந்தித்திச்சுடுவார். இது இரண்டையும் தக்க வைத்துக் கொள்ளணும்னு நினைக்கிறேன்- என்று பதிலளித்தேன்.

அதேபோல, புத்தக வாசிப்பில் ஒரு புது யுகத்தை உருவாக்க தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட தலைவர் கலைஞர் அவர்களின் சாதனைகளை எடுத்துக் கூறி, சார்ஜா புத்தக ஆணைக்குழுவிற்கு 1000 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினேன்.

உலக அளவில் நான்காவது மிகப்பெரிய புத்தக திருவிழாவாக விளங்கிய சார்ஜா புத்தக திருவிழா, ஒரே வருடத்தில் மூன்றாவது பெரிய புத்தக திருவிழாவாக இவ்வருடம் இடம் பிடித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

வெகு விரைவில் இந்த புத்தக திருவிழா சர்வதேச அளவில் முதல் இடம் பெற்றிட தமிழக மக்கள் அனைவரின் சார்பாகவும், தமிழினத் தலைவர் தலைவர் கலைஞர் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் இதயமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்.

மேலும், கடந்த தி.மு.க ஆட்சியின் போது வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்காக ‘வெளிநாடுவாழ் தமிழர்கள் வாரியம்’ ஒன்றை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நிச்சயம் கழக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்படும். அப்படி அமைக்கப்படும் வாரியத்தில் அமீரகத்திலும் உங்கள் சார்பில் ஒரு பிரதிநிதி இருப்பார் என்கிற உறுதியை அனைவருக்கும் தெரிவித்து நன்றி கூறி விடைபெற்றேன்.

இந்த விழாவில் மனைவி துர்காவுடன்  பங்கேற்ற  ஸ்டாலின்,  சர்வதேச புத்தக வாசிப்பாளர்களின் பயன்பாட்டுக்கு தனக்கு அன்பளிப்பாக வந்த 1000 தமிழ் புத்தகங்களை சார்ஜா புத்தக ஆணையத்திற்கு வழங்கினார்.