சென்னை: திமுக எம்எல்ஏக்களால் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் (7ந்தேதி) அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் முதலவராக பதவி ஏற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று மாலை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில், திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தமிழக முதல்வராக வரும் 7ம் தேதி காலை 9 மணிக்கு பொறுப்பேற்கிறார். முன்னதாக இன்று காலை, அதற்கான கடிதத்துடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்க அனுமதிகோரி இன்று ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார்.
பதவி ஏற்பு விழா வரும் வெள்ளிக்கிழமை (7ஆம் தேதி ) காலை 9 மணி முதல் 10மணிக்குள்ளாக, கவர்னர் மாளிகையில் உள்ள திறந்த வெளியில் எளிமையாக நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பதவி ஏற்பு விழாவில்,திமுக தலைவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொரோனா பரவல் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, குறைந்த அளவிலான நபர்களே விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுவதாகவும், புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட சுமார் 300 பேர் வரை மட்டுமே விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கட்சியில் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றவர் பேரறிஞர் அண்ணா, அவரை தொடர்ந்து கலைஞர் கருணாநிதி முதல்வராக பதவி வகித்து வந்தார். அவரது மறைவுக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைக்க உள்ளது. திமுக கட்சியில் 3வது முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார்
. திமுகவில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின் அதற்கு முன்பு சென்னை மேயராகவும், அடுத்து அமைச்சராகவும், அதை தொடர்ந்து துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். இப்படி படிப்படியாக முன்னேறி வந்த மு.க.ஸ்டாலின் தற்போது முதல்முறையாக முதல்வராக பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது.