கோவை:

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில், 2வது கட்ட தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூலூர் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு வேட்டையாடினார். அப்போது, அங்குள்ள வீடு ஒன்றின் முன்பு இருந்த பெஞ்சில் அமர்ந்து அந்த பகுதி மக்களிடம் குறை கேட்டார்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. 5முனை போட்டி நிலவும் 4 தொகுதிகளிலும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு ஓய்வெடுத்த ஸ்டாலின், 2வது கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.  சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக அங்கு வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

இன்று காலை 8 மணியளவில் மு.க.ஸ்டாலின் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுல்தான் பேட்டை ஊராட்சி பகுதியில் வாக்குசேகரக்க சென்ற ஸ்டாலினுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்குள்ள  பொதுமக்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஸ்டாலின் அங்குள்ள ஒருவரின் வீட்டு முன்பு கிடந்த பெஞ்சில் வேட்பாளருடன் அமர்ந்து, அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மக்கள் அவரிடம் தங்களது குறைகளை எடுத்துக்கூறினர். அதற்கு திமுக வெற்றி பெற்றதும் அனைத்து குறைகளையும் சரி செய்து தருவதாக உறுதி யளித்தார்.

அப்போது பெண் ஒருவர் மு.க. ஸ்டாலினுக்கு டீ கொடுத்தார். அதனை வாங்கி குடித்த மு.க. ஸ்டாலின் மக்களிடம் தொடர்ந்து கலந்துரையாடி பொதுக்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் சூலூர் தொகுதிக்குட்பட்ட முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி குரும்பபாளையம், வங்கி அருகில் வேன் பிரசாரம் செய்கிறார். 7 மணிக்கு கரவழி மாதப்பூரிலும், இரவு 8 மணிக்கு இருகூரிலும் வேன் பிரசாரம் செய்கிறார்.