தூத்துக்குடி
இது வரை மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரண நிதி வழங்கவில்லை எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வியட்நாம் நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்வாகன உற்பத்தி ஆலை தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காட் தொழில் பூங்காவில் அமைகிறது. இன்று இந்த ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெருவெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் தனது உரையில்,-
:”நாடாளுமன்றத்தின் கர்ஜனை மொழியாகத் திகழ்கிறார் கனிமொழி. தூத்துக்குடியின் பெண் சிங்கமாகத் திகழ்கிறார் அமைச்சர் கீதா ஜீவன். தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளின் போது போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்றன. தி.மு.க. அரசு எப்போதும் மக்கள் பக்கம் நிற்கும் அரசு. பாதிப்பின் போது பார்வை இடுபவர்கள் நாங்கள் அல்ல; எப்போதும் உங்களுடன் இருப்போம்.
பேரிடர்களின் போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கத் தேவையான திட்டங்களைத் தீட்டுவதுதான் திராவிட மாடல் அரசு. நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. கொரோனா தொற்றின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.
கொரோனாவாக இருந்தாலும், புயல் வெள்ளமாக இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிறோம். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்புகளைச் சரி செய்யத் தமிழக அரசு ரூ.666 கோடி செலவு செய்துள்ளது. நெல்லை, தூத்துக்குடியில் சீரழிந்த சாலைகள் ரூ.342 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மழை, வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை.
தூத்துக்குடியில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். தென்மாவட்டங்களுக்குப் பெரிய தொழில் நிறுவனங்கள் கொண்டுவரப்படுகின்றன. தூத்துக்குடி, நெல்லையில் அமையும் புதிய ஆலைகளால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்.”
என்று தெரிவித்துள்ளார்