சென்னை: தமிழக முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, அவரது அண்ணன் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைப்பெற்று வாக்கு எண்ணிக்கை மே2ந்தேதி நடைபெற்றது. இதில் திமுக பெரும் வெற்றிபெற்று சாதனை படைத்தது. இதையடுத்து திமுக அமைச்சரவை நாளை பதவி ஏற்கிறது. முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இதன் காரணமாக, ஸ்டாலினுக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அரசியல் கட்சித்தலைவர்கள், தோழமை கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரையுலகினர், நண்பர்கள், அவரது குடும்பத்தினர் பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலினின் உடன்பிறந்த சகோதரரும், முன்னாள் தென்மண்டல திமுக செயலாளருமான மு.க.அழகிரி, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக புரிதல் இல்லாதமல், இருந்து வந்த நிலையில், திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதல்வராக பதவி ஏற்கும் தம்பிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
”திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆனது கண்டு பெருமைபடுகிறேன். அவர் எனது தம்பி. அவருக்கு வாழ்த்துக்கள். நிச்சயம் அவர் நல்லாட்சி தருவார்” என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மு.க.அழகிரியின் திடீர் வாழ்த்து, அவர்களுக்கு இடையே நீடித்து வந்த பிணக்கு நீங்கி, இதயங்கள் இணைந்துவிட்டதையே வெளிக்காட்டுகிறது.