சென்னை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மிசோரம் முதல்வரின் ‘சல்யூட்’..

மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விவியன் ரெம்சங்கா என்பவர் சென்னையில் உள்ள ஓட்டல் நிர்வாக கல்லூரியில் படித்து வந்தார்.

கடந்த 23 ஆம் தேதி விவியன் மாரடைப்பால் இறந்து போனார்.

சென்னையில் செயல்படும் மிசோரம் மாநில மக்கள் நலச் சங்கம், அவரது உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டது.

ஊரடங்கு கெடுபிடிகளால், அடுத்த தெருவுக்குக் கூட ஆட்கள் நகர முடியாமல் இருக்கும் நிலையில், விவியன் உடலை 3 ஆயிரத்து 450 கி.மீ.தூரத்தில் இருக்கும் மிசோரம் மாநிலத்துக்கு எப்படி எடுத்துச் செல்வது?

சென்னையைச் சேர்ந்த ஜெயேந்திரன், சின்னதம்பி ஆகிய 2 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், விவியன் உடலை மிசோரம் கொண்டு செல்ல முன் வந்தனர்

கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவில் விவியன் உடலுடன் ஆம்புலன்ஸ் புறப்பட்டது.

இரு டிரைவர்களுடன் விவியன் நண்பர் ஒருவரும் அந்த ஆம்புலன்சில் பயணித்தார்.

நேற்று பிற்பகல் மிசோராம் தலைநகர் எய்ஸ்வால் போய் சேர்ந்தது ஆம்புலன்ஸ்.

அங்குள்ள மக்கள் இரு டிரைவர்களையும் கொண்டாடித் தீர்த்து விட்டனர்.

காடு, மேடு, மலையெல்லாம் கடந்து, விவியன் உடலை கொண்டு வந்த டிரைவர்களுக்கு சால்வைகள், மிசோரம் மாநில உடைகள் கொடுத்து கவுரவம் செய்தனர், அங்குள்ள மக்கள்.

உச்சமாக மிசோரம் முதல்-அமைச்சர் சோரம்தங்காவும் , செய்தி கேள்விப்பட்டு இரு டிரைவர்களுக்கும் பாராட்டு மழை பொழிந்துள்ளார்.

‘’ சென்னை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மிசோரம் சல்யூட் அடிக்கிறது’’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார், மிசோரம் முதல்வர்.

– ஏழுமலை வெங்கடேசன்