கோல்ட் கோஸ்ட்

காமன்வெல்த் 2018 போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் வென்ற பெண் மீராபாய் சானுவின் சாதனை குறித்த விவரங்கள் இதோ

நேற்று நடந்த காமன்வெல்த் 2018 போட்டியின் முதல் நாள் அன்று இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.    மகளிர் பளுதூக்கும் போட்டியின் 48 கிலோ பிரிவில் இந்த பதக்கத்தை வென்றவர் மீராபாய் சானு.   இவர் ஏற்கனவே சர்வதேச அளவில் பல சாதனைகளை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   தற்போது இவர் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

தற்போது 23 வயதாகும் மீராபாய் சானு இம்பால் நகரில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள நோங்க்போக் காக்சிங் கிராமத்தை சேர்ந்தவர்.   ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தனது குடும்பத்தின் கடைசி குழந்தை ஆவார்.   இவரையும் சேர்த்து ஆறு குழந்தைகள் உள்ள இவரது குடும்பத்தின் வறுமை காரணமாக சிறு வயதில் இவரும் இவருடைய சகோதரரும் பக்கத்தில் உள்ள காடுகளில் இருந்து விறகு பொறுக்கி வருவார்கள்.

இது குறித்து அவருடைய சகோதரர் சனதோமா, “நானும் எனது கடைசி தங்கை மீராபாஉ சானுவும் விறகு பொறுக்க அருகில் உள்ள வனப்பகுதிக்கு செல்வோம்.   அவருக்கு 12 வயதாக இருக்கும் போது ஒரு கட்டு விறகை என்னால் தூக்க முடியாமல் திணறினேன்.  என் சகோதரி அதை அனாயாசமாக தூக்கிக் கொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து வீட்டுக்கு வந்தார்.

நான் கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தேன்.   அந்த நேரத்தில் எனது தங்கையின் திறமை கண்டு அவரை பளுதூக்கும் பயிற்சி செய்ய ஊக்குவித்தேன்.   அவர் எப்போதுமே புதிய சாதனைகள் செய்வதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.   அதனால் என் குடும்பத்தின் வறுமை நிலையை பொருட்படுத்தாமல் பயிற்சியில் ஈடுபட்டார்.

அவர் போட்டியில் கலந்துக் கொண்ட சமயத்தில் நான் எனது கிராமத் தோழர்கள் 15 பேருடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அவர் வெற்றி பெற்றதும் காரணமே இல்லாமல் நானும் என் பெற்றோரும் கண்ணிர் விட்டு அழுதோம்.   எங்களால் ஒன்றும் பேச முடியாமல் இருந்தோம்”  என நெகிழ்ச்சியுடன் கூறினார்.