கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்துள்ள கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடி வரை நீர் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, கபினை அணை நிரம்பி வழிகிறது. தொடர்ந்து அணையில் இருந்து அதிக அளவில் நீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்து காணப்படுகிறது. இத்தகைய சூழலில், கபினியில் நீர் திறப்பை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கையில், “கர்நாடகா மற்றும் கேரளாவில் சமீபத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கபினியில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே திறக்கப்படும் 40,000 கன அடி நீர் நாளை காலை மேட்டூர் அணையை வந்தடையும் நிலையில், நாளை இரவு அது 1 லட்சம் கன அடியாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி எச்சரிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.