சென்னை: பெரியார் பிறந்தநாளையொடி, இன்று  தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழகஅரசு அறிவித்திருந்தது. அதன்படி,, இன்றைய தினம் அரசு அலுவலகங்கள் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்கவும் உத்தரவிட்டது. அதன்படி,  இன்று பெரியாரின்  பிறந்தநாளையொட்டி,  சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு கீழே அமைந்துள்ள படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து தலைமைச்செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கு அரசு ஊழியர்களுடன் உறுதிமொழி ஏற்றார்.  சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும் என கூறி சமுக நீதி நாள் உறுதியை முலமைச்சர் ஸ்டாலின் வாசிக்க, அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அனைவரும் அதை ஏற்றனர்.

உறுதிமொழி விவரம்:

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் – யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பன்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன் ! சுயமரியாதை ஆளுமைத் திறனும் -பகுத்தறிவுக் கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும்..! சமத்துவம் , சகோதரத்துவம், சமதர்மம், ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்..! மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்..! சமூகநீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்..!”

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் அந்தந்த ஆட்சியர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

முன்னதாக பெரியார் பிறந்தநாள் குறித்து மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்த டிவிட்டில், மக்கள் மன்றம், நீதிமன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்து மக்கள் மனங்களிலும் சமூகநீதியை விதைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை அவர் பிறந்தநாளான இன்று வணங்குகிறோம். அவர் பிறப்பால்தான் தமிழினம் புதுப்பிறப்பை அடைந்தது. மானமும் அறிவும் உள்ள சமுதாயம் ஆனது.