சென்னை:

நாடெங்கும் டெங்கு காய்ச்சல் குறித்த பீதி பரவி மக்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் டெங்கு நிவாரணம் குறித்த தகவல்களைப் பெற தொடர்புகொள்ளலாம் என அளிக்கப்பட்ட நான்கு எண்களில் ஒன்று உபயோகத்திலேயே இல்லை.

தமிழகம் முழுதும் டெங்கு காய்ச்சல் குறித்த அச்சம் பரவி  மக்கள் பீதியடைந்திருக்கிறார்கள். ஒரு புறம் டெங்குவை ஏற்படுத்தும் கொசுக்களை அழிக்கும் பணியும், டெங்கு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையும் நடந்துவருகின்றன. நிலவேம்பு குடிநீரும் பல இடங்களில் அளிக்கப்பட்டு வருகிறது.

இன்னொரு புறம் டெங்கு ஜூரத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெருகிவருகிறது.

இந்த நிலையில் சென்னை புதுப்பேட்டையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் கொசு ஒழிப்பு முகாமை  அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கிவைத்தார். அப்போது அவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களுக்கான சிகிச்சை ஏற்பாடுகள் பற்றி தெரிவித்தார். (தனிச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.)

மேலும், “பொது சுகாதாரம் மற்றம் நோய்த் தடுப்பு இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை வலுப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் நிலைமையை கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் குறித்து கூடுதல் தகவல் பெற 104 என்ற எண்ணையும், 044-24350496, 24334811 என்ற தொலைபேசி எண்களையும் 9444340496, 9361482899 என்ற கைப்பேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம்” என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ஆனால் அவர் குறிப்பிட்ட எண்களில் ஒன்றான 044-24350496 என்ற எண்ணை தொடர்புகொண்ட போது, “இந்த எண் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது” என்றே பதில் வருகிறது.

மக்கள் டெங்கு பீதியில் உறைந்துகிடக்கும் நிலையில், அவர்களது அச்சத்தைப்போக்க கொடுக்கும் எண்களை அமைச்சர் சரியாக கொடுப்பதில்லையா?