அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர், ஓட்டுநர் விபத்தில் மரணம்: புளியமரத்தில் கார் மோதி விபத்து

Must read

புதுக்கோட்டை: சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் வெங்கடேசன், ஓட்டுநர் செல்வம்  ஆகிய இருவரும் விபத்து ஒன்றில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரை சேர்ந்தவர் வெங்கடேசன். 8 ஆண்டுகளாக அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார்.

மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுதலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு சி. விஜயபாஸ்கர் வாழ்த்து கூறிவிட்டு சனிக்கிழமை இரவு சென்னை திரும்பினார்.

இந் நிலையில், அமைச்சரை திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு ஊர் திரும்பியது. அப்போது  கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும், ஓட்டுநர் செல்வம் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More articles

Latest article