சென்னை: தமிழ்நாட்டில் புதிய அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் பொறுப்பேற்றது முதல் அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் மாநிலம் முழுவதும், அதாவது 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின், 2022ம் ஆண்டு டிசம்பர் 14ந்தேதி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் விளையாட்டுத்துறை மட்டுமின்றி பல்வேறு துறை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். குறிப்பாக முதலமைச்சரின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுடன், விளையாட்டுத்துறை சம்பந்தமான அனைத்து நினைகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தற்போதைய நிலையில், முதலமைச்சருக்கு அடுத்ததாக உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அவரை மாநிலம் முழுவதும் அறிமுகம் செய்யும் வகையில், அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, 234 தொகுகிளிலும் மாவட்டம் வாரியாக அவர் சுற்றப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது,  மாவட்ட வாரியாக விளையாட்டு குழுக்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் ஆங்காங்கே விளையாட்டு போட்டிகளையும் தொடங்கி வைக்கவும், இளைய சமுதாயத்தினரிடையே நன்மதிப்பை பெறும் வகையில், அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட இருப்பதாகவும், மேலும், .அப்பகுதி மக்களையும் சந்தித்து உரையாவும், பொதுக்கூட்டம் நடத்துவதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

2024ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், அவரது பயணம் இருக்கும் என்றும், அண்ணாமலையின் நடைபயணத்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் உதயநிதியின் சுற்றுப்பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்பகிறது.