தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

மானியக் கோரிக்கையில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கடந்த அதிமுக ஆட்சியில் ஐபிஎல் போட்டிகளைக் காண எம்.எல்.ஏ.க்களுக்கு 400 பாஸ் வழங்கப்பட்டதாகவும் தற்போது திமுக ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு இதேபோல் பாஸ் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் ஐபிஎல் போட்டிகளே நடைபெறாத நிலையில் 400 பாஸ்கள் எங்கிருந்து வந்தது” என்று கேள்வியெழுப்பினார்.

மேலும், “ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதே உங்கள் நண்பர் அமித் ஷா-வின் மகன் ஜெய் ஷா தான் என்பதால் அவரிடம் நேரடியாகவே கேட்டு எங்களுக்கும் சேர்த்து பாஸ் வாங்கித் தாருங்கள், அதற்கான பணத்தை கொடுத்துவிடுகிறோம்” என்று கூறினார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிலை அடுத்து அவையில் சிரிப்பலை எழுந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய தருமபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், “தமிழ்நாட்டில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை.

ஆனால், தமிழ்நாட்டின் அணி போல விளம்பரம் செய்து வர்த்தக லாபம் அடைகிறது; தமிழ்நாட்டு வீரர்களே இல்லாத அந்த அணியை அரசு தடை செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்” என்று பேசினார்.