டெல்லி: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடியை  நேரில் சந்தித்தார். அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

தலைநகர் டெல்லிக்கு இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றுள்ளார். அவர்,  தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித்தின் பேத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று மாலை கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து இன்று காலை டெல்லி, க்ரிஷி பவனில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார்.  அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக விவரித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிராஜ்சிங்கை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.