சென்னை: மாணவி மரணம் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை மற்றும்  கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை முழுமையாக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்த மாதம் பள்ளியில் மரணமடைந்தார். இந்த விவகாரத்தில் சமூக விரோதிகள் பள்ளிக்கு தீ வைத்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தியதுடன்,  பல கோடி மதிப்புள்ள வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இந்த விவகாரம்  தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறை பள்ளிக்கு சீல் வைத்து, கலவரக்காரர்களை கைது செய்தது.

இந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிவரும் நிலையில், மரணத்தில் மர்மம்  இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்ட கனியாமூர் பள்ளியை திறக்க பள்ளி நிர்வாகம் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்து வந்தது. அதைத்தொடர்ந்து, முதலில் மேல்நிலைப்பள்ளிக்கான வகுப்புகள் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக வகுப்புகள் மீண்டும் தொடங்கி அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அதனப்டி,  4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் துவங்கிய  நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், பள்ளி திறப்பு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  மார்ச் முதல் வாரத்தில் இருந்து எல்.கே.ஜி. முதல் தொடங்க அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. மேலும்,  குழந்தைகளின் தைரியத்துக்காக பெற்றோரையும் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திற்கு  ஆணையிட்டுள்ளது.