மதுரை: உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டு வருகிறார். அவருடன் அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில்மகேஷ் மற்றும் நடிகர் சூரியும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், தஞ்சையை சேர்ந்த மாட்டு உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரத்தை பரிசாக அணிவித்தார்
மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7.45 மணியளவில் தொடங்கியரது. இதனை தொடங்கி வைக்க நேற்றே மதுரை வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இனறு காலை போட்டி நடைபெறும் வாடிவாசலுக்கு வருகை தந்தார். தொடர்ந்து அமைச்சர்கள் மூர்த்தி பிடிஆர் பழனிவேல்ராஜன், அன்பில் மகேஷ் வருகை தந்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதி மொழிஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டி, ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலாவதாக கோவில் காளைகள் களமிறங்கின. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் உதயநிதி, மூர்த்தி, பிடிஆர், அன்பில் மகேஷ் கேலரியில் அமர்ந்து பார்த்து ரசித்தனர். அப்போது அங்கு வந்த நடிகர் சூரியும் உதயநிதி ஸ்டாலினுடன் கலந்துகொண்டார்.
இன்றைய ஜல்லிக்கட்டில் சுமார் 900 காளைகளும், 340 வீரர்களும் களம் காண உள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், ஆவணங்கள் சரிபார்க்கபட்டு, உடற்தகுதியுள்ள காளைகளும், வீரர்களும் போட்டியில் களமிறக்கப்படவுள்ளனர். தொடர்ந்து வெற்றி பெறும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளன. இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கும், காளை உரிமையாளருக்கும் தலா ஒரு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில், அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக ஒரு காரும், சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாள ருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருவதால், 2 எஸ்.பிக்கள், 8 ஏ.டி.எஸ்.பிக்கள், 29 டி.எஸ்.பிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.