தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில், வெள்ள நிவாரணம் தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம், அமைச்சர் தங்கம் தென்னரசு 72 பக்க மனுவை அளித்தார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக பெய்து வந்த மழை, டிசம்பரில் கொட்டித்தீர்த்தது. டிசம்பர் முதல்வாரத்தில், சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களை வெள்ளத்தில் மிதக்க வைத்து பேரிடரை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல், மழையைத் தொடர்ந்து, டிசம்பர் 3வது வாரத்தில் தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்து பல பகுதிகளை சின்னாப்பின்னமாக்கியது.

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  நிவாரண பணிகளை முதலமைச்சர்,  அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், அரசு உயரதிகாரிகள் ஒருங்கிணைந்து  தீவிரப்படுத்தி செயல்பட்டு வருகின்றனர். இருந்தாலும் பல கிராமப்பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாமல் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதற்கிடையே, தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்  ஆய்வு மேற்கொண்டார்.  அவருடன் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு உள்பட உயர் அதிகாரிகளும் சென்றனர். இதைத்தொடர்ந்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது,  நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் சீரமைப்பு பணிகளுக்கான நிவாரணம் தொடர்பாக 72 பக்க மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

அந்த  மனுவில், தமிழகத்தில் வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் தென் மாவட்டங்களில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பாதிப்பில் பாலங்கள், சாலைகள், பள்ளிகள், பல்வேறு கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. எதிர்பார்த்ததை விட பெரிய பாதிப்புகளை தமிழகம் சந்தித்துள்ளது. எனவே இந்த நிவாரணப் பணிகளுக்கு மாநில அரசிடம் குறைந்த அளவே மாநில பேரிடர் நிவாரண நிதி உள்ளது. இது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு போதுமானதாக இருக்காது. எனவே மத்திய அரசு விரைவாக நிவாரணம் வழங்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.