சென்னை:  வடசென்னையில்  உள்ள ஒரு தனியார்  தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக, அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் மூச்சுத்திணறால் அவதிப்பட்டனர். இதையடுத்து,  பாதிப்பு அடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள், வீடுகளில் இருந்து  அலறியடித்து வெளியேறினர். இந்த சம்பவம் வடசென்னை பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வாயு கசிவு உண்மைதான் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது.

வடசென்னையின் மணலி மற்றும் அதைத்தொடர்ந்து எண்ணூர் வரை ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுக்களால், அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் சொல்லோனா துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை இருந்து திடீரென அமோனியம் வாயு வெளியேறியது. இந்த ஆலைக்கு கடற்கரையில் இருந்து 2 முதல் 3 கி.மீ. தொலைவில் கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கடலுக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலமாக வருகிறது. இந்த குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக பெரியகுப்பம் பகுதிகளில் பொதுமக்களுக்கு திடீரென கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பலர்  சுவாசிக்க முடியாமல் மயங்கி விழுந்தனர்.

ரசாயன வாயு கசிவால் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பீதி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருந்து வெளியேறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், வாயு கசிவு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாசு கட்டுப்பாடு வாரியம், வாயு கசிவு உண்மைதான் என உறுதி செய்துள்ளது.  எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்துள்ளது என்பதை கண்டறிந்த,  மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்தது.

ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 ஆக இருக்க வேண்டிய அமோனியா, 2090 microgram/m3 ஆகவும், கடலில் 5 mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா, 49 mg/L இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.