அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது முறைகேடு மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த செவ்வாயன்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தரப்பட்ட புகாரின் மீது 18 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற தொடர் விசாரணை காரணமாக சோர்வுற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்கமடைந்த நிலையில் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்த அமலாக்கத்துறை, அவரை கைது செய்ததாக பின்னர் அறிவித்தது.

அரசு மருத்துவமனையில் அமலாக்கத்துறை கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று உடல்நலம் விசாரித்தார்.

இதனையடுத்து அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் மூன்று அடைப்பு இருப்பதும் இதை சரிசெய்ய உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டியது அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

இந்த நிலையில் அமலாக்கத்துறை கைதை எதிர்த்து செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை மருத்துவமனைக்கு நேரில் வந்து மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை என்ற பெயரில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் துன்புறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

மேலும், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றவேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் கோரிக்கையையும் ஏற்று அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தார்.

மாநில அரசின் கவனிப்பில் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் சிறப்பான ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மனமில்லாத மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அமலாக்கத்துறை, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து அமலாக்கத்துறை செய்துள்ள இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வர உள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.