சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வீட்டு விழாக்களில் மதுபானம் பரிமாற தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாகத் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியது. பிறகு பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

வழக்கறிஞர் கே பாலு இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.  வழக்கில் உள்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் சார்பில் மதுவிலக்கு துறை ஆணையர் ரத்னா பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்,

“திருமணம் போன்ற நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற வகை செய்யும் பிரிவுகள் நீக்கப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  குடும்ப விழாக்களான திருமணம் உள்ளிட்டவைகளில் மதுபானம் பரிமாற தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், வருவாய் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டு இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு தவறானது. மேலும் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்றுக் கொண்டு வழக்கின் விசாரணையை ஜூலை 5 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்த நீதிபதிகள்,  அது வரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.