சென்னை: ‘பிரிக்க முடியாதது திமுகவும், மின்வெட்டும்தான்’ என்று முன்னாள் அதிமுக அமைச்சர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் சமீப நாட்களாக அடிக்கடி மின்விநியோகம் தடை படுகிறது. இதற்கு காரணம், முந்தையா அரசு டிரான்ஸ்பார்மர்களை பராமரிக்கவில்லை என்றும்,  அணில் கரண்டு கம்பிகளை கடிப்பதாலும் மின்தடை ஏற்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி புதுமையான விளக்கத்தை, அதற்கான படங்களுடன் தெரிவித்தார். இருந்தாலும் அமைச்சரின் கருத்து, சமூக வலைதளங்களில் கலாய்க்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், மின்தடைக்கு காரணமாக, அதிக மின்தேவை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வெயிலை சமாளிக்க சென்னையில் ஏசி பயன்பாடு அதிகரித்திருப்பதால் மின் தடை ஏற்படுவதாகவும்,  கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 151 மெகாவாட் மின் தேவை இருந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியே சென்னையில் மின் தேவை 3 ஆயிரத்து 277 மெகாவாட் என்ற உச்சத்தை தொட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளனர். மேலும் போதிய மின்சாரம் இருப்பதாகவும்,  மின் வெட்டுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் மத்திய தொகுப்பில் இருந்தும் காற்றாலை மின் உற்பத்தி மூலமும் போதிய மின்சாரம் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன், “திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் மின்வெட்டு வந்துவிடும். திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவதுபோல் பிரிக்க முடியாதது திமுகவும், மின்வெட்டும்தான்.” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி,

மின்துறை அமைச்சராக திரு. நத்தம் விஸ்வநாதன் இருந்த போது, மக்கள் துவைத்த துணிகளை மின் கம்பியில் காயப்போடும் அளவுக்கு 18 மணிநேரம் வரை மின்வெட்டு இருந்தது. இதைத் தீர்க்க விஸ்வநாதன் எதாவது புதிய மின் திட்டம் தொடங்கினாரா என தேடிப்பார்த்தால், Google கூட விடை சொல்ல தவிக்கிறது.

2006 – 2011 திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய மின் திட்டங்களால் தான் நத்தம் விஸ்வநாதன் தப்பித்தார். சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி ஊழல் செய்யும் அதிமுக மின் மந்திரிகளின் மின்துறை புரிதல் பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

விஸ்வநாதனின் கீழ் மின்வெட்டு எப்படி இருந்தது என்பதை என்னை விட, அவர்களது கூட்டணி கட்சித் தலைவர் அய்யா @drramadoss அவர்கள் நன்றாகவே விளக்கியிருக்கிறார். மின்துறை பற்றி புரிதல் இருக்கட்டும், முதலில் நத்தையார் மின்துறை பற்றி அறிதல் வேண்டும்.

என விளக்கம்த அளித்துள்ளார்.