சென்னை: ஊழல் வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ள நலையில், அவர் சரண்டர் ஆக இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி ஊழல் தொடர்பாக அவரது தம்பி, அசோக் குமார் ஆஜர் ஆக அமலாக்கத்துறை இதுவரை 4 முறை சம்மன் அனுப்பி உள்ளது. செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் அவரது சகோதரர் அசோக்குமார் வீடு உள்ளிட்ட சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை, அவருக்கு 4 முறை சம்மன் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. 4வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனின் காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், அவர் கொச்சியில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின.
ஆனால்,  செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை எனவும் அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. கைதை மறுத்துள்ள அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பட்டதாகவும், ஆனால் அவர் ஆஜராகவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது. ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை அசோக்குமாருக்கு 4 முறை சம்மன்கள் அனுப்பப்பட்டதாக கூறியிருந்தது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விரைவில் சரண்டராவார் என அவர் தரப்பு வழக்கறிஞர்  தெரிவித்து உள்ளார். அசோக்குமார் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில்,  எந்த வழக்கிற்காக சோதனை நடந்தது என்பது தொடர்பான குற்றப்பத்திரிகையை பார்த்தபின், அவர்  சரண்டராவார் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அசோக் குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய பிறகே செந்தில் பாலாஜிக்கு பிணை கிடைக்கும் சூழல் இருக்கிறது. இந்த நிலையில், குற்றப்பத்திரிகை கிடைத்த உடனே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விரைவில் சரணடைவார் என அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.