கோபிசெட்டிபாளையம்: அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையே சில தனியார் பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிப்பதாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையத்தில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடியை அவர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சில தனியார் பள்ளிகள், ஊரடங்கின்போது மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிப்பதாக எங்களுக்கு தகவல் வருகிறது. தனியார் பள்ளி நிர்வாகங்கள் தற்போது கட்டணம் வசூலிப்பது தெரிந்தால், அரசு சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள் 90 சதவீதம் தயார் நிலையில் உள்ளன. ஊரடங்கு உத்தரவுக்கு முன்பே அவை தயாராகி விட்டன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

[youtube-feed feed=1]