டில்லி

ருத்துவர்களை தாக்குவோருக்கு 10 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் சட்ட வரைவை இந்திய மருத்துவக் குழு அளித்துள்ளது.

கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என் ஆர் எஸ் மருத்துவமனையில் ஒரு முதியவர் சிகிச்சையின் போது மரணம் அடைந்தார். அவருடைய உறவினர்கள் இதற்காக மருத்துவர்களை குண்டர்களைக் கொண்டு மருத்துவமனையின் உள்ளேயே தாக்கி உள்ளனர். இதில் 3 பயிற்சி மருத்துவர் படுகாயம் அடைந்ததால் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் நடத்த தொடங்கினர். அது மாநிலம் எங்கும் பரவியது.

நேற்று இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி – மருத்துவர் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு பேசி உள்ளனர். தற்போது மருத்துவர்கள் வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்துடன் இந்திய மருத்துவக் குழு அளித்துள்ள சட்ட வரைவையும் இணைத்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சட்ட வரைவில், “மருத்துவர்களை தாக்குவோருக்கு 10 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட வேண்டும். இந்த சட்டம் பொதுச் சொத்துக்களை சேதப் படுத்துவோர் மீதான நடவடிக்கை சட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவை ஏற்று மத்திய அரசு உடனடியாக சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் வரைவுடன் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இது குறித்து ஏற்கனவே மாநில அரசுகள் குழு ஆய்வு செய்து முடிவு தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது. அவ்வாறு அமைக்கப்பட்ட குழு அனைத்து மாநிலங்களிலும் மருத்துவர்கள் மீதான வன்முறையை தடுக்க தண்டனைகள் கடுமையாக்கப் பட வேண்டும் என பரிந்துரை செய்திருந்தன. மத்திய அமைச்சர் இந்த குழுவின் பரிந்துரையையும் மாநில அரசுகளுக்கு அனுப்பி கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.